காலக்கண்ணாடி (7)

இரவு நத்தையைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தது , விளக்கின் வெளிச்சத்தில் டைரி எழுதிக்கொண்டு இருந்தேன். இந்த மக்களின் அன்பு, மிகுந்த கடமைப்பட்டவனாக மாற்றுகிறது பாமாவின் அன்பு அலாதியானது எனது தம்பிபோல் அவன் என்னைப்  பார்த்துக்கொண்டான் .

பருப்பும் ,சாதமும் ,கிழங்கு ,வெங்காயம் ,குறுமிளகாய் ,உப்பு,எங்களின் பெரும்பாலான நேரங்களின் உணவு இதுதான்  .சிறு மிளகாயின் காரம் காதுகளின் ஓரம் வரை தெறிக்கும் .

இன்று காலையில் வெளியே வந்தவுடன் பனியுடன் கூடிய மலை, பறவைகளின் சப்தத்தில் மௌனம் கலைக்கிறது .புடு மாஜியின் குடும்பம் அதிகாலையிலே வந்து பூக்கள் பறித்துக்கொண்டு இருந்தார்கள் .அங்கே அவர், கல் மீது அமர்ந்து பால் கொடுத்துக்கொண்டிருந்தார் ,இயற்கை அன்னையாய் காட்சியளித்தார்.

இங்கே பெண்கள்  சேலை மட்டும் தான் அணிந்து இருக்கிறார்கள் ,மார்பகங்கள் பெரிய விஷயமாக இல்லை ,எனக்குள் மார்பகங்கள் தெரியும் பொழுது ஏற்படும் காம இச்சைகள் கூட தற்சமயம் இயல்பாகிப்போன  விஷயமாக மாறியிருந்தது .மார்பகங்களை பார்க்கும் குற்றஉணர்வோ இச்சையோ எழவில்லை ,மாறாக நேசம்  நிகழ்ந்து கொண்டிருந்தது சிறுமி சுஷாந்த் மாஜிக்கு அப்படியொரு சிரிப்பு கல்லை தூக்கிக்கொண்டு செல்லும் போது ,என்னை பார்த்து சிரிப்பதிலேயே ஆயிரம் கதை சொல்லிவிட்டு போகிறாள் .நான் அவள் பேரை தெரிந்து கொண்டு கூவி கூவி அழைக்கிறேன் ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒவ்வொரு அடி தூரமாக சென்றுகொண்டிருந்தாள் .

நான் ஊருக்குள் சென்ற பொது ஆறேழு குழந்தைகளுடன் பள்ளிக்கூடம் ஆரம்பித்து இருந்தது பள்ளிக்கூடம் என்பது நான்கு குச்சிகளின் நடுவே உள்ள ஒரு நீல நிறதார்பாயின் நிழலடி . வாத்தியார் அங்கே அமர்ந்து தலையை படிய வாராத குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி சரி செய்துவர அனுப்புகிறார் . குழந்தைகளுக்கான மதிய உணவு வழங்கப்படுகிறது .வாத்தியார் நேரடியாக நவீனத்தை அழைத்து வருபவராக இருக்கிறார் .குழந்தைகள் ஒரிய மொழியில் கற்பதால் சிரமம் கொள்கிறார்கள் .

என்னளவில் எல்லாக்குழந்தைக்குமான பாடம்  பொதுவாக இருக்கஇயலாது  .இந்த குழந்தைகளின் இயற்கையறிவை  போல் நம்மால் ஒருபோதும் இயற்கையை உணர இயலாது .அவர்களுக்கான பாடத்திட்டத்தில் நாம் எதுவும் சொல்லித்தருவதற்கில்லை ,நாம் கற்று கொள்வதற்கு தான் நிறைய இருக்கிறது ஒரு மரம் சொல்லித் தரும் கனிவை விட ,நதி சொல்லும் பயணத்தை விட ,மலை காக்கும் மவுனத்தை விட ,ஒரு போதும் பள்ளியால் பெரியதாக எதுவும்  சொல்லித்தந்து விடமுடியாது சற்று நேரம் புகைப்படம் எடுத்துவிட்டு வந்துவிட்டேன் ,கிராமத்து பெரியவர் ஒருவரிடம் நெருப்பை எவ்வாறு  உருவாக்குவீர்கள் என சைகையாக கேட்டிருந்தேன் ,அவர் அதற்கு ஆயத்தமாகவே வந்திருந்தார் ,காங்கிரஸ் கோடா என்னும் மரத்தின் காய்ந்த  குச்சியை உடைத்து அதை காலால் பிடித்துக்கொண்டு ஒரு சிறு ஓட்டை  போட்டுவிட்டு,இன்னொரு குச்சியால் அதை கைகளால் திரிக்கிறார்கள் தயிர் கடைவதை போல் .மூன்று பேர்களின் தொடர் சுற்றலுக்கு பின் மெல்ல கசிந்தது புகை ,நெருப்பை மெல்ல வளர்த்து துணி மீதும் இலை மீதும் கங்கை வைத்து ஊதி ஊதி பெரியதாக்குகிறார்கள் . அரைமணிநேர போராட்டத்திற்கு பின் நெருப்பு சுட்டது .
நெருப்பை உருவாகுவதை படம் எடுத்ததை எல்லாரும் காமெராவில் பார்த்தபொழுது வெட்கமாய் சிரித்து  கொண்டார்கள் .போனில் அவர்களை பாட சொல்லி பதிவு செய்து அவர்களுக்கு  காண்பிப்பேன் .ஏற்கனவே காமெராவின் கார்டில் இருந்த ஜல்லிக்கட்டு போட்டோவெல்லாம் காண்பித்து கொண்டிருந்தேன் .கொஞ்ச நேரத்திலேயே பெண்களில் இருந்து குழந்தைகள் வரை போட்டோபார்பதற்கு நெருங்கி வந்தார்கள்.அவர்களது வெட்கத்துடனே அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டேன் .

குழந்தைகளுக்கு தான் எவ்வளவு மகிழ்ச்சி ,போட்டோ எடுத்தவுடன் காண்பித்த பொழுது ஒரே சிரிப்பாய்  இருந்தது   .ஒரு நடுத்தர  வயதுக்காரர் ஓடிச்சென்று தனது ஆட்டுக்குட்டியை கையில் வைத்தபடி கொஞ்சியபடி போட்டோ எடுத்துக்கொண்டார் .சிலர் கேமரா முன்பு தான் கொண்டு வந்த தண்ணீர் குடத்துடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார். குழந்தைகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க நான் மாயாஜால  வித்தைக்காரனாய் மாறி இருந்தேன்

2 comments on “காலக்கண்ணாடி (7)

Leave a Reply

Your email address will not be published.